Random image

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தால் மல்லையாவும், ஜெட்லியும் சந்தித்த உண்மை வெளிச்சத்துக்கு வரும்….காங்கிரஸ் எம்.பி.

டில்லி:

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை மீண்டம் நாடு கடத்த இந்தியா புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் மீது டிசம்பர் 10-ம் தேதி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா, ‘‘ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்தேன்’’ என்றார். அருண் ஜெட்லி இதை மறுத்துள்ளார். மல்லையாவின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியும் இந்த கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அருண் ஜெட்லியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு 2 நாட்களுக்கு முன் நாடாளுமன்ற மை ஹாலில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15 முதல் -20 நிமிடங்கள் வரை பேசினர் என்று காங்கிரஸ் எம்.பி புனியா இன்று தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டால் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.