ஜேல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜின்னா ஆதரவாளரா? : காங்கிரஸின் சூடான பதில்

பாட்னா

பீகாரின் ஜேல் தொகுதியில் போட்டியிடும் மெகா கூட்டணியின் வேட்பாளர் மஸ்கூர் உஸ்மானி ஜின்னா ஆதரவாளர் இல்லை எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.   ஆளும் ஐ ஜ த மற்றும் பாஜக கூட்டணிக்கும் ராஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியான மெகா கூட்டணிக்கும் இடையில் போட்டி கடுமையாக உள்ளது.   இந்த கூட்டணி சார்பில் ஜேல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மஸ்கூர் உஸ்மானி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

மத்திய பாஜக அரசில் அமைச்சராக உள்ள கிரிராஜ் சிங், “காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜேல் தொகுதி வேட்பாளர் மஸ்கூர் உஸ்மானி பாகிஸ்தான் தலைவர் ஜின்னாவின் ஆதரவாளர் என சொல்லப்படுகிறது.  அதைக் காங்கிரஸ் மற்றும் மெகா கூட்டணி தெளிவு படுத்த வேண்டும்.   அத்துடன் அவர்களும் ஜின்னாவை ஆதரிக்கிறார்களா என்பதற்கும் பதில் வேண்டும்.” எனக் கேள்விகள் எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா “பாஜக தனது வெறுப்பு தொழிற்சாலையில் இருந்து சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.   எங்கள் கட்சியின் ஜேல் தொகுதி வேட்பாளர் என்றும் ஜின்னாவின் கொள்கைகளை ஒப்புக்கொண்டதில்லை. அவர் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவராக இருந்த போது ஜின்னாவின் ஓவியத்டை அகற்ற பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்துக்கு நாடாளுமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றம் உள்ளிட்டவை பதில் அளித்துள்ளன.  ஆனால் இதுவரை பிரதமர் மோடி மட்டும் ஏனோ பதில் அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.