இன்று ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் (ஏப்ரல் 13)

மிர்தசரஸ்

ன்று அமிர்தசரஸில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்ததின் நினைவு நாள் ஆகும்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வான சத்தியாக்கிரக நடவடிக்கை 1919 ஆம் ஆண்டு மார்ச் 1 தொடங்கியது.    பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த சத்தியாக்கிரக இயக்கத்தை நசுக்க திட்டமிட்டனர்.   இதற்காக ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.    அந்தக் குழு இயற்றிய ரௌலட் சட்டம் ஊடகங்களை கட்டுப் படுத்தவும் விசாரணை இன்றி போராட்டக்காரர்களை சிறையிடவும் வழி வகுத்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து 1919 ஆம் ஆண்டு மார்ச் 29 அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் மாபெரும் கூட்டம் நடத்தப்பட்டது.    இந்தக் கூட்டத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டது.    இதனால் ஆங்கிலேய அரசு மிகவும் ஆத்திரம் அடைந்தது.   இந்நிலையில் ஏப்ரல் 13 அன்று  வைசாகி தினம் பஞ்சாபில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை ஒட்டி ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.   இந்த திடல் நான்கு புறமும் மிக உயர்ந்த பாதுகாப்பு சுவருடனும்,  ஒரே ஒரு சிறிய வாசலுடனும் அமைந்ததாகும்.    திடலின் நடுவில் ஒரு கிணறு இருந்தது.   இந்த திடலுக்குள் ராணுவ அதிகாரி ரெஜினால்ட் டையர் என்பவன் தனது 100 வெள்ளைக்கார ராணுவ வீரர்களையும் 50 இந்திய ராணுவ வீரர்களையும் அழைந்து வந்தான்.

டையரின் உத்தரவுப்படி முன் அறிவிப்பின்றி கூட்டத்தினர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.   உயிரைக் காக்க அங்குமிங்கும் ஓடிய மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.   பலர் சுவரில் ஏறிக் குதித்து கீழே விழுந்து மரணம் அடைந்தனர்.  உயிரைக் காக்க திடலில் இருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள்  120 பேர் ஆகும்.   துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர்.   சம்பவ இடத்தில் இறந்தவர் மட்டுமே 379 பேர் என சொல்லப்படுகிறது.

இந்தப் படுகொலைக்கு காரணமான டையர் லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் இந்நிகழ்வு நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாபியரான உத்தம் சிங் என்பவரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.