சென்னை,

ல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிகை எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர்.

சென்னை மெரினாவிலும் இளைஞர்களின் போராட்டம் நடந்து வந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடியதால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதையடுத்து போலீசார் மாணவர்கள்மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக சமூக விரோதிகளால் சென்னை முழுவதும் வன்முறை வெடித்தது.

இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப் பட்டது. மேலும் பல இங்களில் அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாரின் வன்முறை யால் மெரினா அருகே இருந்த  நடுக்குப்பம் மீனவ பகுதி கடும் சேதத்துக்கு உள்ளானது.

இந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் மீது பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவர்களை ஒடுக்க  போலீசாரே பல இடங்களில் வன்முறையை உருவாக்கியது ஆதாரப்பூர்வ மாக தெரிய வந்தது.

இதற்கிடையே கலவரத்தை பயன்படுத்தி போலீசாரே பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த தாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின.

இதுகுறித்த போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

மேலும் இதுகுறித்து சைபர் கிரைம் மூலம் விசாரணை செய்யப்படும் எனவும் கூறியிருந்தார்.

தற்போது, சென்னை கலவரம் தொடர்பாக கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், கலவரத்தை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீதும், வாகனங்களை சேதப்படுத்திய போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது.

இவர்கள்மீது எடுக்கப்பட இருக்கும் நடவடிகை குறித்து இன்று கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.