மதுரை:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  மதுரை அருகே ஊரடங்கை மீறி இறந்த ஜல்லிக்கட்டு கோயில் காளையின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் , குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டும், அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வோர் மூகமூடி அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மதுரை முதுவரப்பட்டி  பகுதியில் உள்ள கோயில் காளையான ஜல்லிக் கட்டுக்காளை உடல்நலமின்றி இறந்தது. இந்த காளையி இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தை அந்த ஊர் மக்கள் பிரமாண்டமாக நடத்தி உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி,  சமூக விலகல் விதிமுறைகளையும் காற்றிவில் பறக்கவிட்ட அந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கணக்கானோர் முகக்கவசம் இன்றி   ஜல்லிக்கட்டு காளையின் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தி,  இறுதி சடங்குகளை நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு  செய்துள்ளனர்.