டில்லி,

மிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதி மன்றம் தடை விதித்த நிலையில், தமிழக மக்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தடையை நீக்கி புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த  ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற பல்வேறு அமைப்பினர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை கடந்த ஆண்டு நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவர் அனுமதியும் பெற்றது.

இதைத்தொடர்ந்து கர்நாடகாவும், தங்களது மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கம்பளா என்ற எருது போட்டியை மீண்டும் நடத்தும் வகையில், புதிய சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த சட்டங்களை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி உள்பட 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் பொதுசட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து,  ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

இனிமேல் ஜல்லிக்கட்டு வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து முடிவு அறிவிக்கும் என கூறபபடுகிறது.