மதுரை,

ல்லிக்கட்டுக்கான சட்டம் வேறு, நீட்டுக்கான சட்டம் வேறு என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.

மேலும் நீட்டில் இருந்து தமிழகத்துக்க விலக்கு கொடுக்க மத்திய அரசு முயற்சி செய்தது ஆனால், உச்சநீதி மன்றம் அதை நிராகரித்துவிட்டது என்றும் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த இல.கணேசன் எம்.பி., ‘மாட்டுக்கான சட்டம் வேறு… ‘நீட்’டுக்கான சட்டம் வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது’ என கூறினார்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்காக ஓராண்டு விலக்கு கொண்டு வர நான் உள்பட மத்திய அமைச்சர்கள் சிலர் முயற்சி செய்தோம், மத்திய அரசும் தமிழகத்துக்கு சாதகமான சில முடிவுகளை எடுத்தது. ஆனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் அவ்வாறு விலக்களிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது’ என்று கூறினார்.

மேலும்,  முத்தலாக் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருப்பவர்கள் இஸ்லாமியப் பெண்கள்தான். உச்சநீதிமன்றத்தால் அவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. முத்தலாக் விவகாரத்தைப் பொறுத்தவரை பாஜகவின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறினார்.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கணேசன்,

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய பின்பு ஆட்சி கவிழும் என்றார்கள். ஆனால் நடக்கவில்லை.   தற்போது இரண்டு அணியினரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இப்போது அவர்களில் சிலர் எதிர் நிலையை எடுத்திருக்கிறார்கள்.

அதிமுக பிளவுபட்டதற்கு பாஜக ஒரு போதும் காரணம் அல்ல. ஆனால் அதிமுக ஒன்றுபட்டதை தவறு என்று பலரும் சொல்வதை ஏற்கமுடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.