ஜல்லிக்கட்டு சட்டம்: 2014-ம் ஆண்டு தீர்ப்புக்கு மாறாக உள்ளது! உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

டில்லி,

மிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண கோரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து,  தமிழக அரசு மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் இந்த சட்ட முன்வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சட்ட முன்வரைவுக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு இன்று பிற்பகல் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் கூபா சார்பாக ஆஜராக காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனுசிங்வி முடிவு செய்திருந்தார். ஆனால்,  தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர் ஆஜராகாமல் தவிர்த்தார்.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது.

தமிழக சட்டத்தை படித்துபார்த்த நீதிபதிகள், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும்,  இந்த வழக்கில் 2014ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றும் விதத்தில் புதிய சட்டம் உள்ளது என்று கூறினர்.

மேலும், ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்ப்பது ஏன் என விலங்குகள் நல வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்த மத்திய, தமிழக அரசு வழக்கறிஞர்கள், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் இன்னும் இரண்டு நாளில் அரசிதழில் வெளியிடப்படும் என்றனர்.