சென்னை,
மிழகத்தில் வரும் 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த மூத்த பாரதியஜனதா கட்சி தலைவர் இல.கணேசன்.
மேல்சபை எம்.பி. பதவி ஏற்றுக்கொண்ட இல.கணேசன் நேற்று சென்னை வந்தார். அப்போது  நிருபர்களிடம் கூறியதாவது:
ganesan
இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு, ஒரே மக்கள் என்பது பா.ஜனதாவின் முழக்கம். இது வெறும் வாய் வார்த்தைகள் மட்டும் அல்ல. உணர்வுப்பூர்வமாக அது நடக்கிறது என்பதை உணர்த்துகிற வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னை, மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்கள் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி அனுமதியோடு டெல்லி மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்து எடுத்து அனுப்பி இருக்கின்றனர்.
அது மட்டுமல்ல, பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரும் என்னை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கருத்தை (ஒரே நாடு, ஒரே மக்கள்) நிரூபிக்கிற வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றதற்காக பெருமிதம் கொள்கிறேன். நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காவிரி பிரச்சினை குறித்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் உணர்வுகளில் பா.ஜனதா எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. நாங்களும் அதில் முன்னணியில்தான் இருக்கிறோம்.
jallikattu
அது மாத்திரமல்ல, காவிரி பிரச்சினைக்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதா எந்த முயற்சி மேற்கொண்டாலும் நாங்கள் அதற்கு ஆதரவு என்பதை திரும்ப திரும்ப வெளிப்படுத்தி இருக்கிறோம்.
இப்போதும் அதையே சொல்கிறோம். நடைபெற இருக்கும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு சார்பில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை வலியுறுத்துவோம். அதைப்போலவே ஜல்லிக்கட்டும்.
நான் உறுதியோடு சொல்கிறேன், அடுத்த ஆண்டு (2017) பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதற்கான முயற்சிகளை நானும், பாராளுமன்றத்தில் எனக்கு முன்னோடியான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.