சென்னை,
சென்னையில் தற்போது கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், போராட்டத்தை கைவிடுவது குறித்து தமிழக அரசு அல்லது
திரைப்பட நடிகர் லாரன்ஸ் வந்து பேச வேண்டும் என்று நிபந்தனை விதித்து உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடத்தி வருகின்றனர் இளைஞர்கள், மாணவ மாணவிகள் மற்றும்
பொதுமக்கள்.

தமிழக அரசு தற்காலிக அவசர சட்டத்தை இயற்றியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுமாறு முதல்வரும், காவல்துறையும் வேண்டுகோள்
விடுத்தனர்.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் கூறினர்.

இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், நூற்றுக்கணக்கான போலீசார் மெரினா கடல் அருகில் சென்று போராடத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தங்களை அப்புறப்படுத்த முயன்றால் கடலுக்குள் இறங்கிவிடுவோம் என்று கூறி வருகிறார்கள்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தற்போது மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் மெரினாவில் போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். போராட்டத்தை கைவிட்டு கலையுமாறு கோரி
வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள், அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும் அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் தாங்கள்
கலைய தயார் என கூறியுள்ளனர்.

மைலாப்பூர் துணை கமிஷனர் வி.பாலகிருஷ்ணன்தான் லாரன்ஸிடம் பேசியுள்ளதாகவும், அவர் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இப்போது மெரினாவில் திருநங்கைகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடற்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, போராட்டக்காரர்களை கண்காணித்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டக்களத்துக்கு வந்துள்ளனர்.
மெரினாவில் இந்த நேரத்திலும் போராட்டக்காரர்கள் கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.