ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கலைத்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகமே வியந்து பார்த்த மிகுந்த கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அறவழி நின்று போராடிய இளைஞர்களையும் பெண்களையும் வலுக்கட்டாயமாகப் போராட்ட களத்திலிருந்து வெளியேற்றும் காவல்துறைக்கும் தமிழக அரசிற்கும் கடுமையான கண்டனங்கள்.

அதிகாலை நேரத்தில் வந்து கலைந்து செல்ல நேரம் கொடுக்காமல் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிரானது. அரசு இந்தச் சர்வாதிகார நடவடிக்கையின் மூலம் தேன் கூட்டத்தில் கை வைத்துவிட்டது விரைவில் அதற்கான பலனை அனுபவித்தே தீரும்.

மக்கள் போராட்டங்களை அடுக்குமுறையால் வெல்லமுடியாது என்பது தான் உலக வரலாறு.. எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கையிலெடுக்காத பொழுது மக்கள் அரசை கையிலெடுப்பார்கள்.. புரட்சி எப்பொழுதும் வெல்லும்.