டி.வி.எஸ். சோமு பக்கம்:

“ நாங்க டூ டேஸா ஜல்லிக்கட்டுக்காக ப்ரோட்டஸ்ட் பண்றோம். யெஸ்டர்டே நைட் இலவென் பி.எம்.க்கு போலீஸ் கம். தே ஆர் த்ரட் மீ. பட் வி வாண்ட் மாரல் சப்போர்ட். திஸ் ஈஸ் மக்கள் போராட்டம். ஜல்லிக்கட்டு ஈஸ் அவர் டிரடிசன். நாங்க தொடர்ந்து ப்ரோட்டஸ்ட் பண்ணுவோம்..”

– ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளம்பெண் ஒருவர் பேசியது இது. இதே போலத்தான் பல இளைஞர்களும் பேசுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ் உணர்வுடன் போராடும் தமிழ் இளைஞர் பெரும்பாலோருக்கு இயல்பாக தமிழ் பேச வரவில்லை. உணர்ச்சிவசப்படும்போது தாய் மொழியில் பேசுவது மனிதரின் இயல்பு. ஆனால் இவர்களில் பெரும்பாலோரால் அப்படிப் பேச முடியவில்லை.

பெரும்பாலான தமிழ் இளைஞர்களின் நிலை இன்று இப்படித்தான் இருக்கிறது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா, தற்கொலை செய்துகொண்டார் அல்லவா?  அப்போது ஆங்கிலத்தில்தான் தனது கடைசி கடிதத்தை எழுதியிருந்தார்.

அதே போல இன்னொரு சம்பவம். சேலம் வினுப்பிரியா. இவரது ஒளிப்படத்தை மார்பிங் செய்து, இணையத்தில் உலவவிட்டார் ஒரு இளைஞர். இதை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் வினுப்பிரியா. இவரும் தனது கடைசி கடிதத்தை ஆங்கிலத்தில்தான் எழுதி வைத்திருந்தார்.

எந்த விதத்திலும் தற்கொலை தவிர்க்கப்படவேண்டியதே. அதை ஏற்பதற்கே இல்லை.

அதே நேரம் இன்னொரு விசயத்தையும் நாம் யோசிக்க வேண்டும். ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் உணர்ச்சிகரமான நேரத்தில்கூட தனது தாய்மொழியில் நாலு வார்த்தை எழுத முடியாத நிலை.

சமீபத்தில் ஒரு இளைஞனிடம், “நாளை சனிக்கிழமைதானே” என்றேன். “இல்லை சார்.. சாட்டர்டே”என்றான்.

இப்படிப்பட்ட இளைஞர்கள் ஆங்கிலத்திலாவது சிறப்பான மொழி ஆளுமையுடன் இருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.  ஆங்கிலம் அரைகுறை.. தமிழ் குறை, குறை.

இப்படி எந்த மொழியும் மனதில் இல்லை என்றால், எப்படி சிந்தனை வளரும்?

போகட்டும்.. இந்த சூழலிலும் பாரம்பரிய உணர்வோடு ஜல்லிக்கட்டுக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடும் அவர்களை பாராட்டவே வேண்டும்.

தவிர, தமிழ் சரளமாய் பேச வராதது,   இந்த இளைஞர்களின் தவறல்ல. அவர்களை தமிழ் வழியில் படிக்க வைக்காத முந்தைய தலைமுறை (அதாவது பெற்றோரின்) தவறே.

இந்த நிலை தொடரக்கூடாது. தமிழ் எழுதப்படிக்க, ஓரளவு சரளமாக பேச தெரியவேண்டும். இல்லாவிட்டால்  தென் ஆப்பிரிக்கா, பப்புவாநியூகினியா, செஷல்ஸ்,  மொரிஷியஸ் வாழ் தமிழர்கள்போல தமிழே சுத்தமாகத் தெரியாத நிலை நாளைய தமிழர்களுக்கு ஏற்பட்டுவிடும்.. அதுவும் தாயகமான தமிழ்நாட்டிலேயே.

இனியேனும் இந்த இளைஞர்கள் ஓரளவு நல்ல தமிழ் கற்க முயல வேண்டும். “ஸ்போக்கன் இங்கிலீஷ்” போல, “பேசு தமிழ்” பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். வாரம் ஓரிரு மணி நேரங்கள் வகுப்பு நடக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டம் (வெற்றிகரமாக) நிறைவடைந்தவுடன், அவர்கள் செய்ய வேண்டிய பணி இதுதான்.