சென்னை,

சென்னை மெரினா கடற்கரை இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளால் நிரம்பி வருகிறது. எங்கு நோக்கிலும் இளைஞர்கள் கூட்டம்.

இன்று நடை பெற்று வரும் போராட்டம் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்க வலியுறுத்தியும்,  மதுரை அலங்கா நல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனே எந்தவித காரணமுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.

நேற்று காலை முதல் தொடர்ந்து, நேற்றிரவு வரை நீடித்த இந்தப் போராட்டம் கொட்டும் பனியை யும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய நடைபெற்று தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போராட்டத்தை தடுக்கும் வகையில், போலீசார்நே ற்றிரவு மெரினா கடற்கரை சாலையில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் திடீரென அணைத்து போராட்டத்தை செயல் இழக்க செய்ய முயன்ற னர்.

ஆனால் இளைஞர்கள் தங்களிடம் இருந்த  கைபேசிகளில் உள்ள டார்ச் லைட்களை தீபம் போல் மிளிரவிட்டு போராட்டக்காரர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.

அவர்களை சமாதானப்பட்டுத்த மாநில அமைச்சர்கள் முயன்றனர். ஆனால், அவர் முதல்வர் நேரில் வந்து பேச வேண்டும் என்றனர். இதன் காரணமாக அமைச்சர்களின்  முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற உறுதிமொழியை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனர்.

இதுதவிர, சென்னை நகரின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் லாரி மற்றும் வேன்களில் ஏறி மெரினா கடற்கரையை நோக்கி படை யெடுத்து வருகின்றனர்.

காலை 12.30 மணி நிலவரப்படி மெரினா கடற்கரை சாலை முழுக்க மக்கள் தலைகளாகவே காணப்படுகின்றன. மெரினாவே மக்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்க ஆதரவாக நடிகர் மன்சூர் அலிகான், ராகவா லாரன்ஸ், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட சில திரை பிரபலங்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழிப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆவடி, போரூர், விருகம்பாக்கத்தில் தொடங்கி, மெரீனா வரை நடக்கும் இந்தப் போராட்டம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, தமிழ் மக்கள் முதல் முறையாக வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தை மத்திய அரசும், மாநில அரசும் வஞ்சித்து வருகிறது. ஆளுங்கட்சியினர் அவர்களது சொந்த நலனுக்காக மட்டுமே அரசியல் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரியத்தை காக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றே குற்றம்சாட்டப்படுகிறது.

 

இதன் காரணமாகவே  இன்று இளைஞர்கள்  எந்தவித அரசியல் தூண்டுதலும் இல்லாமல், தன்னெ ழுச்சியாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

உணவு உறக்கம் மறந்து விடிய விடிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றால் மிகையல்ல.

பீட்டா என்ற அமைப்பு இந்தியாவிலிருந்து துரத்தப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு உறுதியாக நிற்கின்றனர்.

இதை வலியுறுத்தி இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள 40-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்னையில் ஒன்று திரண்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் சென்னை விருகம்பாக்கத்திலிருந்து கடற்கரை வரை பிரமாண்ட பேரணி நடத்தி, ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்தப் போராட்டம் இன்று காலை விருகம்பாக்கத்தில் தொடங்கியது. பிற்பகல் கடற்கரையை அடையவிருக்கிறது.

கடற்கரையில் நேற்றிலிருந்து ஜல்லிக்கட்டு ஆதரவாகப் போராடி வரும் மக்களுடன் இணைந்து போராட்டத்தைத் தொடரவிருக்கிறது.

இதன்காரணமாக போராட்டம் இன்னும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்று வரும் போராட்டம் தமிழர்களின் வரலாற்றில் பொறிக்கப்படும் பொன்னெழுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மெரினா உள்பட மாநிலத்தின் பிறபகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாகவும் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோருடன் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.