ஜல்லிக்கட்டு போராட்டம்: மாற்று அரசியலுக்கு வழியா?

– சந்திரபாரதி

ஜல்லிக்கட்டுக்காக  தன்னெழுச்சியாய் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சக்தி உரக்கச் சொல்லும் செய்தி, மாற்று அரசியலுக்குத் தமிழகம் தயார் என்பது தான்.

ஆள்பவர்கள், ஆண்டவர்கள், ஆள நினைப்பவர்கள் மீது நம்பிக்கையிழந்த பின் தான் போராட்டத்தை தன்னிச்சையாய் கரம் பிடித்துள்ளனர் மாணவர்கள். கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல இந்தப் போராட்டம், அரசியல் புளுகர்களை நம்பி சென்ற தலைமுறை செய்த தவறுகளை தாங்கள் செய்யத் தயாரில்லை என்பதும், தாங்கள் எவரின் கைப்பாவையுமில்லை என்பதை உரத்தச் சொல்வதே இந்த தன்னெழுச்சி. இப்போராட்டத்தில் மறைந்துள்ளது

அரசியல்வாதிகளின் மீதுள்ள இளைய சமூகத்தின் அடங்காக் கோபம். நேற்று ஒரு நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,

” இந்த மாணவர் சக்தியும் சேர்ந்து தானே மத்திய – மாநில அரசாங்கங்களுக்கு வாக்களித்தனர்” என்று. உண்மைதான், முதல் முறை வாக்களர்களாக பெரும்பான்மை மாணவர்கள் வாக்களித்தனர் தாம்.

ஒரு திருப்பத்தை எதிர் நோக்கியே வாக்களித்தனர், இப்போது நிதர்சனத்தை உணர்ந்து விட்டனர். சாதிய, பிரித்தாளுகின்ற, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற, பித்தலாட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் அரசியல்வாதிகளையும் குறுகிய காலத்திலேயே அடையாளம் கொண்டு விட்டனர் இப்போதைய தலைமுறையினர்.

தங்கள் கோபத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த மாணாவர்களுக்கு “ஜல்லிக்கட்டு தடை” மேடையமைத்துக் கொடுத்துள்ளது.

நதி போல் களங்கமின்றி பெருக்கெடுத்து ஓடும் இவ்விளைஞர்களின் சக்தி வீணாக்கப்படக் கூடாது. காட்டாறாய் ஓடி பலனின்றி மறைந்த விடவும் விடக் கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களும் மற்றும் பல இளைஞர்களும் இன வாத, மத வாத, பாலியல் பேத, திராவிட- ஆரிய கோடல், சாதி பேத எண்ணங்களைத் தாண்டியவர்கள்.

இவர்கள் செழிப்பான நஞ்சை நிலம் போன்றவர்கள். இவர்களுக்குள் வீரிய விதைகளை விதைக்கப் போவது யார், அவர்களுக்கே இனி வரும் காலங்களில் அரசியல் அறுவடை, தமிழ் மானுடம் பயனுறவே… வெல்க இளைய தமிழ் சமூகத்தின் எழுச்சி.