மதுரை:

கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கை, செப்டம்பரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.


கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், பெண்கள் திரண்டு தாங்களாகவே போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின்போது சென்னை, மதுரை போன்ற இடங்களில் கலவரம் மூண்டது. போலீஸார் தடியடி நடத்தியதால், பலரும் காயமடைந்தனர்.
இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த போராட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வழி ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில், இந்த கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசாரணைக்குழு தலைவர் நீதிபதி ராஜேஷ்வரன் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணை முடிந்தது.
பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சிலர் போலீஸாருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மற்ற அனைவருமே போலீஸாருக்கு சாதகமாகவே வாக்குமூலம் அளித்துள்ளனர். விசாரணை அறிக்கையை செப்டம்பர் மாதம் அரசிடம் தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.