அடித்துக்கொல்லப்பட்ட ஜல்லிக்கட்டு காளை .. வீடியோவை வைத்துத் தேடும் போலீசார்…

மாதிரி புகைப்படம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச்  சேர்ந்தவர் 35 வயது வெற்றிவேல்.  இவர் சென்னசந்திரம் பஞ்சாயத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் ஒரு ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்திருக்கிறார்.  இது பல ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளது.  இக்காளையை எப்போதும் பாப்பாரப்பட்டியில் இடுகாட்டிற்கு அருகேயுள்ள இவரது பண்ணையில் கட்டி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் இம்மாதம் 5-ம் தேதி வழக்கம் போலத் தனது பண்ணைக்குச் சென்ற இவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  இவரது ஜல்லிக்கட்டுக் காளை அங்கே உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது.  அதன் வாயிலிருந்து ரத்தம் ஒழுகிய நிலையிலும் மற்றும் அதன் கொம்புகள் உடைந்தும் காணப்பட்டதைப் பார்த்துப் பதறிப்போன வெற்றிவேல் முறையான பிணப்பரிசோதனைக்குப் பின் இறந்த காளையை அடக்கம் செய்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ வெற்றிவேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத மூன்று பேர் தன் பண்ணையில் கட்டி வைத்திருந்த தனது காளையைக் கற்களால் மூர்க்கத்தனமாகத் தாக்குவதைப் பார்த்துள்ளார்.

இதனைக்கண்ட உடனே தன் காளையைக் கொன்ற நபர்களின் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறையில் புகார் அளித்துள்ளார் வெற்றிவேல்.  இவரின் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் காவல்துறையினர்.

தொழில் முறை போட்டியா அல்லது இவரது பணி காரணமாக உண்டான விரோதமா என்று இதுவரை தெரியவில்லை.

– லெட்சுமி பிரியா