விராலிமலை

இன்று உலக சாதனை முயற்சிக்காக விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கலை ஒட்டி ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கான ஒன்றாகும். சுமார் இரு வருடங்களுக்கு முன்பு பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை ஒட்டி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசால் சட்டம் இயற்றபட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலையில் இன்று உலக சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 2000 காளைகள் கலந்துக் கொள்கின்றன. அந்த காளைகளை அடக்க 500 வீரர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் செய்யப்படுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருபுறமும் மக்கள் அமர சுமார் 9 ஆயிரம் பேர் அமரும் வகையில் காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர மைதானத்தின் வெளியேயும் மக்கள் கண்டு களிக்க வசதியாக 4 எல் இ டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பார்வையாளர்கள் 200 பேர் வந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக சாதனைக் கூட்டமைப்பை சேர்ந்த மார்க், லெமன் ஆகியோரும் வந்துள்ளனர்.

இந்த விழாவில் கலந்துக் கொண்டு காளையை அடக்கும் 3 சிறந்த வீரர்களுக்கு கார், பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்க உள்ளன. அதைத் தவிர சைக்கிள், பிரிட்ஜ், டிவி, மிக்சி, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ ஆகியவைகளும் ஏராளமாக வழங்கப்பட உள்ளன. சுமார் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உலக சாதனைக்கான ஜல்லிக்காட்டை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழா விராலிமலை ஸ்ரீ பட்டமரத்தம்மன் கருப்புசாமி கோவில் விழா கமிட்டியினரால் நடத்தப்படுகிறது. இந்த கமிட்டி சார்பில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கவனித்து வருகிறார்.