” இளவரசர் சல்மான் உத்தரவின் பேரில் ஜமால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் “ – அமெரிக்க உளவுத்துறை

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் உத்தரவிட்டிருக்கலாம் என அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. முடிவிற்கு வந்துள்ளது.

சவுதி இளவரசர் சல்மானை தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த துருக்கியை சேர்ந்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கடந்த மாதம் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றபோது காணாமல் போனார். அவர் திருமணம் செய்ய இருந்த நிலையில், அதன் காரணமாக துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

jamal

ஜமால் மாயமானது தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பி வந்த துருக்கி அரசு அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும், அதற்கு சவுதி இளவரசர் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டி வந்தது. இந்த குற்றச்சாட்டை சவுதி அரசு தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் துருக்கி ஒரு சில ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டது. அதன்பின்னர், ஜமால் கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது.

மேலும், ஜமால் வேண்டுமென்றே படுகொலை செய்யப்பட்டதாகவும் அவரது கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி தொடர்ந்து சவுதிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதையடுத்து, சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் கஷோகி தொடர்பாக 5 பேர் மீது சந்தேகம் உள்ளது என்றும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

எனினும் இந்த கொலைவழக்கில் இளவரசர் சல்மானுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என சவுதி அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், இளவரசர் சல்மானின் உத்தரவின் பேரில் ஜமால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது. சல்மானின் சகோதரரும், அமெரிக்காவுக்கான சவுதி தூதர் காலேத் பின் சல்மான் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியுடன் நடந்த உரையாடலை சிஐஏ ஆதாரமாக கொண்டுள்ளது.

அந்த உரையாடலில் கஷோக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்று தேவையான ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும்படி இளவரசர் சல்மானின் சகோதரர் காலேத் தொலைபேசியில் தெரிவித்ததாக சிஐஏ கூறியுள்ளது. சிஐஏ இந்த ஆதாரத்தை அமெரிக்க அரசிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.