பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை – செளதி பட்டத்து இளவரசர் மீது வழக்குப்பதிவு!

கொலம்பியா: துருக்கியிலுள்ள செளதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்ட பிரபல செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் முன்னாள் துருகூகி காதலி ஹேட்டிஸ் சென்ஜிஸ், செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது, அந்தக் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், முகமது பின் சல்மான் மட்டுமின்றி, கூடுதலாக 20 செளதி நாட்டவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு கொலம்பியா மாவட்ட ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, வழக்கறிஞர் கெய்த் ஹார்பெர் அறிவித்தார். ஜமால் கஷோகியின் துருக்கிய காதலி மற்றும் கஷோகியால் அமைக்கப்பட்ட அரபு உலகத்திற்கான ஜனநாயக அமைப்பு ஆகியோர் சார்பாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இதுதொடர்பாக கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க மறுத்துவிட்டது செளதி அரசிற்கான சர்வதேச தொடர்புகள் மையம்.

கடந்த 2018ம் ஆண்டு, துருக்கியிலுள்ள செளதி அரேபிய தூதரகத்தில், சில ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக தனியாக சென்ற ஜமால் கஷோகி, பின்னர் திரும்பி வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து கடுமையாக விமர்சித்து எழுதி வந்ததால், இவரின் மரணத்தில், பட்டத்து இளவரசர் மீது பலரின் சந்தேகப் பார்வை விழுந்தது குறிப்பிடத்தக்கது.