2009ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு வெளியாகும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்படும் என சொல்லப்பட்டது. முதல் பாகத்தின் தாக்கத்தால், அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் அறிவிப்பின் வாயிலாகவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில், உலக மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ’அவதார் – 2’ டிசம்பர் 21, 2021ல் வெளிவரும் என இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவதார் படங்களின் வெளியீட்டை ஒத்திவைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
”அவதார் ரசிகர்களே,
அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கொரோனா அச்சுறுத்தலால் நியூசிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘அவதார்’ படத்தின் படப்பிடிப்பு எதிர்பாராத வகையில் வேறு வழியின்றி நீண்ட தாமதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இப்போதும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும்பாலான தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள விடாமல் இந்த வைரஸ் எங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பைப் போலவே அந்தப் பணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவுக்கு முன்னால், 2021 ஆம் தேதி டிசம்பர் மாதம் அவதார் இரண்டாம் பாகத்தைக் கொண்டுவருவதற்கான அனைத்து வேலைகளும் சரியான திசையில் சென்று கொண்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக, கொரோனா தாக்கத்தால் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை.
இந்த தாமதத்தால் என்னை விட அதிகம் கவலைப்படுவோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் எங்களுடைய நடிகர்களின் அற்புதமான நடிப்பினாலும், பண்டோரோ உலகத்தை உருவாக்கி, படத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வேடா டிஜிட்டல் நிறுவனத்தின் பணிகளாலும் நான் நிம்மதியடைகிறேன்.
டிஸ்னி நிறுவனத்திடமிருந்து குறிப்பாக ஆலன் ஹார்ன் மற்றும் ஆலன் பெர்க்மேன் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
அனைத்துக்கும் மேலாக ரசிகர்களாகிய உங்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். வருடக்கணக்கான நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நாங்கள் திரையரங்கில் வெளியிடும் படத்தின் மூலம் நன்றிக்கடன் செலுத்துவோம்”.
இவ்வாறு ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்துள்ளார்.