ஜாமியா பல்கலைக்கழக வன்முறைக்கு பிரதமர், உள்துறை அமைச்சரே பொறுப்பு! குலாம் நபி ஆசாத்

டெல்லி:

ஜாமியா பல்கலைக்கழக வன்முறைக்கு பிரதமர், உள்துறை அமைச்ர் உள்பட மத்திய அமைச்சரவையே பொறுப்பு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் வன்முறையான நிலையில், காவல்துறையினர் உள்ளே புகுந்து வன்முறையை கட்டுப்படுத்தினர். இந்த  வன்முறை காரணமாக வாகனங்கள் எரிக்கப்பட்ட நிலையில், காவலர்களின் தாக்குதலில்  பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜாமிய பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீசார் நுழைந்தது எப்படி? அதுகுறித்து  நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்  குலாம் நபி ஆசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக வாசலுக்கு வெளியே மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது கற்களை வீசினர். இதில் துணை போலீஸ் கமிஷனர், உதவி போலீஸ் கமிஷனர் ரேங்கில் உள்ளோர உட்பட சுமார் 30 போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஓடியும், உள்ளே புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதித்து யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதி வழங்கவில்லை என்ற நிலையில், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால், டெல்லி காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், மாணவர்களின் போராட்டத்தின்போது, போலீசார் முடிந்த அளவுக்கு அமைதியை கடைபிடித்து போராட்டத்தை கலைக்க முற்பட்டனர். நிலைமை கைமீறி போனதற்குப் பிறகு போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தான் தடியடி நடத்தப்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படும் தகவல் பொய்யானது. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், .பல்கலைக்கழக துணை வேந்தரின் அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் நுழைய முடியாது. அவர்கள் அனுமதிக்கப்படாவிட்டால், மத்திய அரசின் கீழ் வரும் காவல்துறை எவ்வாறு வளாகத்திற்குள் நுழைந்தது? அதை நாங்கள் கண்டிக்கிறோம் இதுகுறித்து  நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது எங்கள் அரசியல் கட்சியின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சியின் குரலும்  என்று கூறியவர், ஜாமியா பல்கலைக்கழகத்தில் நேற்று என்ன நடந்தது என்பது தெரிய வேண்டும் என்று வலியுறுத்தியவர், மத்தியஅரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தல் தாக்கல் செய்த நாளில் இருந்து இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

மேலும், நாங்களும் மாணவர்களாக இருந்தபோது, அரசியலின் ஒரு பகுதியாகவே செயல்பட்டோம் என்று கூறியவர், பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிர்வாகம் மற்றும் பதிவாளர் அனுமதியின்றி ஒருபோதும் காவல்துறையினர் நுழைந்தது இல்லை. ஆனால், நேற்று ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

டெல்லி காவல்துறை மத்திய அரசின் கீழ் வருகிறது, அவர்கள் . அனுமதியின்றி காவல்துறையினர் எவ்வாறு பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்கள்? இது குறித்து நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அசாமில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இணையம் இயங்கவில்லை. நாடு முழுவதும் CAB எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது, ஆனால், மாணவர் போராட்டத்துக்கு  பின்னால் காங்கிர1 கட்சி  இருப்பதாக பாஜக குற்றச்சாட்டு கூறி வருகிறது.  மாணவர்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பின்னால் காங்கிரஸ் இருப்பதாக பிரதமர் கூறுகிறார்.

ஆனால்,  இத்தகைய வன்முறையைத் தூண்டும் திறன் காங்கிரசிடம், இருந்திருந்தால், நீங்கள் ஆட்சியில் இருந்திருக்க மாட்டீர்கள் என்று கூறியவர்,  இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் அதை கண்டிக்கிறேன் என்றவர், இதுபோன்ற வன்முறைகளுக்கு  ஆளும் கட்சி, பிரதமர், ஹோம் மினிஸ்டர் மற்றும் அவர்களின் அமைச்சரவை மட்டுமே இதற்கு பொறுப்பாகும்.

இவ்வாறு ஆசாத் கூறினார்.