2 முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல்: காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவ இன்று காலை   7 மணி முதல் தொடங்கி  நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடையும்.

காஷ்மீரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு அக்டோபர் 8,10, 13, 16ம் தேதிகள் என 4 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில்,  காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  பிரிவினைவாதிகள்  உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். அதற்கு ஆதரவாக,  தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். அதுபேலவே  முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிப்பதாக  அறிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் அங்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்று முதல்கட்டமாக  ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள  4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.