ஜம்முகாஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலானது : ஜனாதிபதி ஒப்புதல்

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி முறிவை தொடர்ந்து, முதல்வர்  மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கவர்னர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மத்திய அரசின் பரிந்துரைக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால்,  கடந்த 10 ஆண்டுகளில்  4வது முறையாக கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முக்தி, பாரதியஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு வந்தது. அங்கு நடைபெற்று வரும் வன்முறையை மற்றும் அதன்மீதான பாதுகாப்பு படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு முதல்வர் மெகபூபா அதிருப்தி தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், ரம்ஜான் மாதத்தையொட்டி, இந்திய அரசு தாக்குதல்கள் நிறுத்தியது. ஆனால், இதை வாய்ப்பாக கருதி  பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் படையினரும் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த வாரம் ரம்ஜான் முடிந்ததும், இந்திய படையினர் மீண்டும் தாக்குதல்களை தொடங்கினர். இதற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா கடும் அதிருப்தி தெரிவித்தார். அரசு படைகள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரினார்.

ஜம்மு மாநில கவர்னர் எம்.என்.வோரா

இதன் காரணமாக பாஜக, பிடிபி கட்சிகளுக்கு இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று பாஜக தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநில பாரதியஜனதா சட்டமன்ற உறுப்பினர்களை டில்லி அழைத்து ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, பிடிபி கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக பாரதிய ஜனதா அறிவித்தது.

மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக நேற்று விலக்கிக் கொண்ட தால் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்தத. இதன் காரணமாக ஆட்சிக்கு  பெரும்பான்மை இல்லாததால் முதலமைச்சர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார்

காஷ்மீரில் நிலவி வரும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் அமைதியற்ற சூழல் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாகவும், இதனால்  மெகபூபா ஆட்சிமீது அதிருப்தி அளித்துள்ளதாகவும் காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கூட்டணி முறிவால், மெகபூபா தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். வேறு எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராத நிலையில், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப் படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் வோரா, மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர  ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார். ஜம்மு காஷ்மீல் மாநில சட்டப்பிரிவு 92ன் படி கவர்னர் ஆட்சி அமல்படுத்த கோரியிருந்தார்.

அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு,  ஜம்மு காஷ்மிரில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமது உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஜனாதிபதி அறிவித்து உள்ளார். அதன் காரணமாக  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை முதல் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.