மோடியின் தவறுகளால், காஷ்மீர் எரிகிறது’: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் தவறுகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பயங்கரவாதத்தால்  பற்றி எரிவதாக  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. . இதையடுத்து  பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் உஜ்ஜெயின் நகரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார். முன்னதாக உஜ்ஜெயின் நகரில் உள்ள புகழ்பெற்ற, மிகப்பழைமையான மகாகாளீஸ்வர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். .

பிறகு உஜ்ஜெயின் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசயதாவது:

“பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை இதுவரை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், நடைமுறைப்படுத்தி விட்டதாக பேசிவருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் என்னை வந்து ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது மோடியை ஓஆர்ஓபி பென்ஷன் திட்டத்தில் மிகவும் நம்பி இருந்தோம், ஆனால், இப்போது வேதனைப்படுகிறோம் என்று கூறினர்.

ஆனால், பிரதமர் மோடியோ ஓஆர்ஓபி ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார். அவர் உங்களிடம் பொய் சொல்கிறார். இப்போதுவரை அந்தத்திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்போது பயங்கரவாதிகளால் பற்றி எரிகிறது. கடந்த ஒருவாரத்தில் பாதுகாப்புபடையினர் பலர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

மோடி அரசு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கான கதவை திறந்துவிட்டுள்ளது. நரேந்திர மோடியின் தவறுகளால் ராணுவ வீரர்கள்தான் தங்கள் உயிரைத் தியாகம் செய்து வருகிறார்கள்.

பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் கூட்டம்

பிரதமர் மோடி துல்லியத்தாக்குதல் பற்றியும், ராணுவம், கடற்படை பற்றியும் பேசுகிறார், ஆனால், ராணுவ வீரர்கள் குறித்து பேசுவதில்லை. துல்லியத்தாக்குதல் நடத்திய உங்களுக்கு (ராணுவ வீரர்களுக்கு) என்ன செய்தார் என்பதை மோடி கூற வேண்டும்.

படித்த இளைஞர்களுக்கு வேலை அளிப்பதற்கு  பதிலாக பக்கோடா விற்கச் சொல்கிறார் மோடி. நீங்கள் பக்கோடா வறுத்தால், பாஜகவினர் எண்ணெயில் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள். அந்த எண்ணெய் பகோடாவைக் கூட தின்றுவிடும்.

வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிடு ஓடியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவர்,  நாட்டைவிட்டுச் செல்லும் முன், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து 40 நிமிடங்கள் பேசியிருக்கிறார். நிதி அமைச்சருக்குக் கீழ் பல்வேறு விசாரணை அமைப்புகள் இருக்கும்போது, அவர் அது குறித்து தெரிவித்திருக்கலாம்.

இதேபோல வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடியையும், அவரின் மாமா மெகுல் சோக்சியையும் மத்திய அரசு தப்பவைத்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக பாஜக ஆட்சி செய்கிறது.  ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மிகப்பெரிய வியாபம் ஊழல் வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை” என்று ராகுல் காந்தி பேசினார்.