7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட காஷ்மீர் பள்ளிகள்! மாணவ மாணவிகள் உற்சாகம்

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ மோடி அரசு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை ஏற்படலாம் என்று கருதி  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது அங்கு அமைதி நிலவி வரும் நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.  மாணவ மாணவிகள் ஆர்வமாகவும், உற்சாகமாகவும்  பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.

கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 5ந்தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து மோடி தலைமையிலான பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம்  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், முக்கிய நபர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் முக்கிய அலுவலகங்கள் அடைக்கப்பட்டன. அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு பிறகு படிபடிப்பாக தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்னும் சில இடங்களில் தொலைதொடர்பு சேவை தொடங்கப்படாத நிலையில்,  முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமல் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்பட பலர் இன்னும் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அங்கு பல பகுதிகளில் அமைதி திரும்பியதைத் தொடர்ந்து, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளை பெற்றோர்கள் எந்தவித பயமுமின்றி அனுப்பலாம் என்று,  யூனியன் பிரதேச கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று சில மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்த நிலையில், இன்று பெரும்பாலான குழந்தைகளை அவர்களின்  பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அழைத்து வந்திருனர்.

7 மாதங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், பள்ளிக்குழந்தைகள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். தங்களது பள்ளித் தோழர்களை கண்டு பரசவமடைந்தனர்.