டில்லி:

ம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவான 370-ஐ மத்தியஅரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்றுமுதல் உச்சநீதி மன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையைத் தொடங்குகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பில் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. பல ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியல் சாசனம் பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளைப் பிரித்து இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவும் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் இந்த தீர்மானம் மற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கிய நிலையில், இது தொடர்பான அரசாணை மத்திய அரசின அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எம்.எல் சர்மா எனும் வழக்கறிஞர்தான் முதன் முதலில் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பிலும், சஜாத் தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி, தனிமனிதர்கள் என பலரும் மனுத்தாக்கல் செய்தனர். காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான மனுக்கள், காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாததற்கு எதிரான மனுக்கள், குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் இந்த அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

மேலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்கள் முகமது அக்பர் லோன், ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னன் மசூதி, முன்னாள் சபாநாயகர் அக்பர் லோன், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஷீலா ரஷித் உள்ளிட்ட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது. இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.

அதன்பின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் எஸ்கே கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் (செவ்வாய்க்கிழமை)  விசாரணையைத் தொடங்குகிறது.