ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில்  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டமாக நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி, குப்கர் மக்கள் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு சமீபத்தில்  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை (செவ்வாய்க்கிழமை)  9 மணிக்கு  தொடங்கியது.  மதியம் 12 மணி நிலவரப்படி, குப்கர் மக்கள் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைக்கொண்ட குப்கர்  பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி  47 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.