ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்: 12 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை, 9 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகளில், 12 மணி நேர துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் 9 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட, வீரர்கள்  தக்க பதிலடி கொடுத்தனர்.

அதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந் நிலையில், ராணுவத்தினர் தேடிய பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். உடன் காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.

அப்போது தீவிரவாதிகள் என கண்டறியப்பட்ட 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 மணி நேரத்தில் மொத்தம் 9 தீவிரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.