இன்று 80வது பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டனுக்கும் கவுரவத்தை ஏற்படுத்திய தலைவர் வாழப்பாடியார்…

வாழப்பாடியாரின் 80வது பிறந்தநாள்… தமிழுலகம் உள்ளவரை புகழ் மறையா தலைவரின் பிறந்தநாள் இன்று… காவிரிக்காக தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாள்… இன்று அவரது அரசியல் மற்றும் சாதனைகள் சிலவற்றை நினைவு கூர்வதில் பத்திரிகை டாட் காம் இணையதளம் பெருமை கொள்கிறது…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருமுறை  மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தி.

1940ம் ஆண்டு  இதேநாளில்  சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் இராமமூர்த்தி. தனது 19வயதில் 1959ம் ஆண்டு முதன்முதலாக திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் களத்தில் குதித்தார். தீவிர அரசியலில் குதித்தவர், திராவிடர் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் ஒத்துவராத நிலையில், 1960ம் ஆண்டு அதிலிருந்து விலகி, அகில இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அவர் ஆற்றிய சுறுசுறுப்பான பணியினால், 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து,காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ.என்.டி.யூ. சி. யின் தலைவராகப் பணியாற்றினார். பிறகு  காங்கிரசின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

இதைத்தொடர்ந்து 1977ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், முதன்முத லாக  தர்மபுரி மக்களவைத் தொகுதியில் களமிறங்கி அமோக வெற்றி பெற்றார். தர்மபுரி தொகுதியில் அவர் ஆற்றிய நற்பணிகளால், 1980, 1984, 1989 ஆண்டுகளில் தொடர் வெற்றியை பதிவு செய்தார்.  1991ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்  கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998ம்ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று சாதனை படைத்தார்..

1991ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

பின்னர் கட்சித்தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அங்கிருந்து விலகி, திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார்.

1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். ஆனால், அப்போது வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை.

இந்த நிலையில், தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி,  1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதியஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். அதன்காரணமாக,1998-99ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமை யிலான பாஜக ஆட்சியில், பெட்ரோலியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

பின்னர் 1999ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும்  பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கிய நிலையில், வெற்றிபெற முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2001ம் ஆண்டு ராஜீவ் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் தாய்க்கட்சியான அகில இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, 2002ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

வாழப்பாடியார் ஆற்றிய பணிகள்:

நரசிம்மராவ் அமைச்சரவையில் (1991 – 92ம் ஆண்டு)  மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக இருந்த, வாழப்பாடியார், காவிரிப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு விரோதமான போக்கை கடைபிடித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அமைச்சர் பதவியை உதறித் தள்ளி தமிழக வரலாற்றில் இடம்பிடித்தார்.

அரசியலை வைத்து ஆதாயம் செய்து வரும் இன்றைய அரசியல்வாதிகளிடையே, தனது மாநில மக்களுக்காக தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த வாழப்பாடியாரின் செயலும், புகழும் என்றென்றும் மங்காத நிலையில், தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த பிரதமர்  அமரர் ராஜீவ் காந்திக்கு சென்னையில் சிலை அமைத்தவர் வாழப்படியார்.  அதே போல் தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாட்டில் சிலை அமைக்க வழி வகுத்தவரும் வாழப்பாடியார் என்பது நினைவுகூறத்தக்கது.

அதுபோல,  இன்றைய டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் சங்கம் உருவாக காரணமானவரும் வாழப்பாடி யார்தான். 1990ம் ஆண்டில், அங்கு தமிழக மாணவர்களுக்கும், ஒடிசா மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட, அங்கு சென்ற மத்திய அமைச்சர் வாழப்பாடியார், தமிழ் மாணவர்கள் ஒன்று சேரும் வகையில், ரூ.10ஆயிரம் நன்கொடை வழங்கி தமிழ் அமைப்பை தொடங்கி வைத்தார். இந்த பெருமை வாழப்பாடியாரையே சேரும்…

துக்ளக் ஆசிரியர் மறைந்த சோ-வால், தமிழகத்தில்  தைரியமாக உண்மையை பேசக்கூடிய ஒரே அரசியல் தலைவர் திரு வாழப்பாடி இராமமூர்த்தி என்று புகழப்பட்டவர் என்பது இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வாழப்பாடியாரின் அரசியல் குறித்து கலைஞரின் கண்ணோட்டம் என்ன என்பது குறித்து,  முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறிய கருத்து…

வாழப்பாடியாரின் மறைவுக்குப் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற வாழப்பாடியாரின் 70வது பிறந்தநாள் விழா சமயத்தில்,  அப்போதைய தி.மு.க.பொருளாளர் ஆற்காடு வீராசாமி, வாழப்பாடியாரின் அரசியல் பயணத்தை திமுக தலைவர்  கருணாநிதி தினசரி எதிர்பார்ப்பதாகவும்,  காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களை படிக்கும்,  எங்கள் தலைவர் (கலைஞர்) என்னய்யா ராமமூர்த்தி இன்னைக்கு  என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்பார்.  அந்த அளவுக்கு வாழப்பாடியாரின் அரசியல் நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் வரவேற்பை பெற்றதோடு அல்லாமல், திமுக தலைவர் கருணாநிதிக்கும், வாழப்பாடியாரின் அரசியல்  மிகவும் பிடிக்கும் … என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, வாழப்பாடியார் குறித்த நினைவலைகளை உதிர்த்த ஆற்காட்டார்,  தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவரப்பா அவர் (வாழப்பாடியார்) . சில நிகழ்ச்சிகளில் அவரை நேரில் சந்திக்கும் போது என்ன தலைவா எங்களை இந்த பாடு படுத்தறீங்களே என கேட்பேன்… அதற்கு அவர் சிரித்துக்கொண்டே,  அதுதான்யா அரசியல், நீ உன் கட்சியை விட்டுக் கொடுப்பியா? நீயும் நானும் நண்பர்கள், அது வேறு. அரசியல் என்று வந்துவிட்டால் நாம எதிரிதான், என் கட்சியும் தொண்டனும்தான் எனக்கு முக்கியம் என்பார்.

இன்று  அவர் இல்லாததால், காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல தமிழக அரசியலிலேயே மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று வாழப்பாடியாரின் அரசியல் நாகரிகம் குறித்து எடுத்துரைத்தார்.

தமிழக அரசியல்வாதிகள் மனதில் தனக்கென தனி இடம்பிடித்த வாழப்பாடியார், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், இந்திராகாந்தி முதல் இளைய தலைவர்கள் ராஜீவ்காந்தி வரை அனைவரிடமும் நட்பு பாராட்டியவர்…

தமிழகத்தில்,  காங்கிரஸ் கட்சிக்கும், அதன் அடிமட்ட தொண்டனுக்கும் கவுரவத்தை ஏற்படுத்திய தமிழக தலைவர்களில், முக்கியமானவர்  வாழப்பாடியார்… எந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பி வந்த தொண்டனை கைவிடாமல், கைதூக்கி விட்ட ஒரே தலைவர் வாழப்பாடியார்தான்…

இன்று அவரது 80வது பிறந்தநாள்…

கார்ட்டூன் கேலரி