சென்னை: தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு  வரும் 20ந்தேதி கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. பின்னர் அரசு வழங்கிய படிப்படியான தளர்வுகள் காரணமாக, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  கல்லுாரிகளில்,  பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 2020 டிசம்பர், 2 முதல் நேரடி வகுப்புகள்  தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் உள்பட பெரும்பாலான பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 70 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கவே கோரிக்கை வைத்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்தது.
இந்த நிலையில், முதல்கட்டமாக உயர்நிலை வகுப்பான 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளான 11, 12ம் வகுப்புகளுக்கு வரும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வரின் ஒப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் ஒப்புதல் கொடுத்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.