ஜனவரி-25; மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று…!

ஜனவரி 25ந்தேதி இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில், இந்தி திணிப்பைக் கைவிடக் கோரி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் 1930ம் ஆண்டு முதலே பள்ளிகளில் இந்தி படிப்பு கட்டாய மாக்கப்பட்டது. இதற்கு எதிராக திராவிட கட்சிகள் போர்க்கொடி தூக்கின. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.  போராடியவர்களை அப்போதைய ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறையில் அடைத்து கொடுமை படுத்தியது. இதன் காரணமாக,1939 ஜனவரி 15 அன்று நடராஜன் என்பவர் மரணமடைந்தார். பின்னர், 1939 மார்ச் 13ம் ந்தேதி தாளமுத்து என்பவரும் இயற்கை எய்தினார். இவர்களுக்கு சாவுக்கு அப்போதைய அரசு மற்றும் சிறை நிர்வாகத்தின் கொடுமை என்று குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், அப்போதைய நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, இந்திமொழியை மீண்டும் திணிக்கும் வகையில் செயல்பட்டது.  தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாக இந்தியை படிக்க கட்டாயப்படுத்தியது. அப்போதைய ஓமந்தூரார் தலைமையிலான தமிழகஅரசும், மத்தியஅரசுக்கு ஆதரவாக ஒத்து ஊதியது. இதனால், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமாகியது.

இந்தி திணிப்பை எதிர்த்து,  பெரியார் ஈவேரா,  ம.பொ .சிவஞானம், திருவி.க.  உள்பட பல தலைவர்கள் களம் புகுந்தனர். இருந்தாலும் மத்தியஅரசு  படிப்படியாக அரசு இந்தியை வளர்த்து வந்தது. சட்ட ஆணைகளில் இந்தியை பயன்படுத்தியது .

நடராசன், தாளமுத்துவின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததால், இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணை 1940-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், 1965-ல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது.

அப்போது நாட்டில் உள்ள  36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும்  பேசிய இந்தி மொழியை நாடு முழுவதும் திணித்த மத்தியஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகின. இதையடுத்து,  1959 இல் “ஹிந்தி பேசாத மாநில மக்கள் ஆங்கிலத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என நேரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு 15 ஆண்டு காலம் கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பான சட்ட திருத்தத்தில்  சில குளறுபடிகள் எழுந்த நிலையில், மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிரமானது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் கொதித்து எழுந்தது . 70 பேர்  தீக்குளித்து தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டனர். போராட்டத்தால் நெருக்கடி அதிகரிக்கவே, வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு வந்தது.

இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், 1967-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சியமைக்கவும், ஆட்சிக் கட்டிலுக்கு வெகு தூரத்தில் காங்கிரஸ் இருப்பதற்கும் இந்தி எதிர்ப்பு அடித்தளம் இட்டது என்றால் மிகையல்ல

இந்த வேளையில்தான், டால்மியாபுரத்தை கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்யசொல்லி 1953 போராட்டம் நடந்து இரண்டு திமுக தொண்டர்கள் உயிர் விட்டார்கள் . அண்ணா, பெரியார் ,முந்தைய இந்தி ஆதரவாளர் ராஜாஜி ஆகியோர் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று 1956 இல் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தலையிட்டு, தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீர்கள் என மத்தியஅரசை எச்சரித்தார். அதன்பிறகே மத்திய அரசு அமைதியானது. அதன்பிறகே, தாய்மொழி, ஆங்கிலம், விருப்பமொழி என்ற மும்மொழி கொள்கையை கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் மீண்டும் இந்தியை திணிக்கும் நோக்கில் மத்தியஅரசு 1986 இல் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறந்தது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி  எதிர்ப்பு தெரிவித்து,  போராட்டம் நடத்த நவோதயா பள்ளிகள் திறக்கும் திட்டத்தை மத்தியஅரசு கைவிட்டது.  தற்போதும் இந்தி திணிப்பு  வெவ்வேறு உருவங்களில் தமிழகத்தில் நுழைய முயற்சித்து வருகிறது.

இந்தி திணிப்புக்காக உயர்நீதி மொழிப்போர் தியாகிகளை கவுரவப்படுத்தும் நோக்கில் இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.