ந்திய சுதந்திரத்திற்காக  ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று.

ஆங்கிலேயரின் வரி வசூலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் சூழ்ச்சியினால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்ட பொம்மன். 30 வயதில் பாளையக்காரராகப் பொறுப்பேற்ற வீரபாண்டியன், கட்ட பொம்மன் என்றும்  கட்டபொம்ம நாயக்கர் என்றும் அழைக்கப்பட்டார்.

அந்த காலங்களில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த வீரபாண்டியன், பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதன் காரணமாக வீரபாண்டியன் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்.

இதையடுத்து, 1797ம் ஆண்டு  கட்டபொம்மனை எதிர்த்து போரடி பி பெரும்படையுடன் வந்தார் ஆலன் என்ற பிரிட்டிஷ் தளபதி. ஆனால், அவரால் பாஞ்சாலங்குறிச்சி  கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. இதன் காரணமாக வீரபாண்டியன் மீது  மேலும் கோபத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை கைது செய்ய திட்டமிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு வீரபாண்டி யனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலைக்கழித்து சந்தித்தார். கட்டபொம்மன்.

இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து இவரைக் கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன்  வீரபாண்டியனிடம் வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த வீரபாண்டியன்,   ‘உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள்’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளை யக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தனர்.

இதன் காரணமாக வீரபாண்டிய கட்ட பொம்மனை தீர்த்துக்கட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதையடுத்து,  1799-ல் வேறொரு தளபதியின் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி முற்றுகையிடப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே கடுமையாக போர் நடைபெற்றது. இதில் பலர் இறந்தனர். ஆனால், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்தார்.

ஆனால், அங்கு ஆங்கிலேயரின் வஞ்சகத்தால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பிரிட்டிஷ் அதிகாரிகள், இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போதுகூட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனது கர்ஜிக்கும் குரலில் பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன்,   ‘என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடி னேன்’ என்றார். இதையடுத்து, அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாககூறி . 1799ம் ஆண்டு கயத்தாறில் உள்ள ஒரு புளிய மரத்தில் தனது 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.

தற்போது அந்த இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு  நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படம் தயாரிக்கப்பட்டது. 1959-ம் ஆண்டு அப்போதைய பிரபல படத்தயாரிப்பாளர்  பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கட்டபொம்மனின் பிறந்தநாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.