‘பிரவசி பாரதீய திவாஸ்’ எனப்படும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான தினம் இன்று… மேலும், மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய நாள்.

இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆற்றும் பங்கை முன்னெடுத்துக் காட்டுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 9ஆம் தேதி பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியவரும், இந்தியர்களின் வாழ்வை மாற்றி அமைத்தவருமான மகாத்மா காந்தி,  தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று தான் இந்தியாவிற்கு திரும்பினார். அந்த வரலாற்று நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 9ல் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது.

பிரவாசி பாரதீய திவாஸ் (PBD) என்பது வெளிநாட்டில் வாழும்  இந்திய சமூகத்தினர்  இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதை வலுப்படுத்தும் வகையில் கடந்த  2000ம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் மூலம்  புலம் பெயர்ந்து வாழும்  இந்தியர்களின் உறவுகளைப் பேணவும், இந்தியாவுடன் நெருக்கத்தை உருவாக்கவும் உதவும் அரசின்  முக்கியத் திட்டம். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்த தினம் ஜனவரி 7 முதல் 9ந்தேதி வரை  கொண்டாடப்படும் நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தினம் அமைகிறது.

இந்த விழாவின்போது  தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியா மற்றும் வெளிநாட்டில் பல்வேறு துறைகளுக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்கு மதிப்ப மிகு பிரவாசி பாரதீய சம்மான் எனும் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.

இந்த பிரவாசி பாரதீய சம்மான் (Pravasi Bharatiya Samman விருதானது, இது மகாத்மா காந்தி அடிகள் 1915ம் ஆண்ட ஜனவரி 9ந்தேதி இந்தியா திரும்பிய நாளை நினைவுபடுத்தும் வகையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான தினத்தின் முதல் விழா 2003ம் ஆண்டு டெல்லியிலும், 15வது ஆண்டு விழா கடந்தஆண்டு உ.பி. மாநிலத்திலும் கொண்டாடப்பட்டது.

கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட  15 ஆவது பிரவாசி பாரதீய திவாஸ் ஒன்றுகூடுதல் கூட்டம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார்.