டோக்கியோ: ஜப்பானில் புதியதாக 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் 93 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு ஜப்பானின் கான்டோ பகுதியில் 91 பேருக்கும், விமான நிலைய பரிசோதனையில் 2 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தொற்று மேலும் பரவாமல் இருக்க சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை 151 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.