கொரோனா சிகிச்சைக்கு டெக்ஸாமெத்தாசோன் மருந்து – ஜப்பான் அரசு அனுமதி!

டோக்கியோ: கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்கு, டெக்ஸாமெத்தாசோன் மருந்தை இரண்டாவது சிகிச்சை உபாயமாக அனுமதித்துள்ளது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை.

இந்த டெக்ஸாமெத்தாசோன் மருந்து, தற்போதைய நிலையில், கொரோனா சிகிச்சைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மலிவான மருந்தாகும்.

இந்த மருந்தை, ரெம்டெஸிவிர் மருந்துடன் சேர்த்து, இரண்டாம் நிலை உபாயமாக பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது சுகாதார அமைச்சகம். ஜப்பான் சுகாதார அமைச்சகத்தின் இந்த முடிவால், அந்த மருந்தை தயாரிக்கும் நிகி-‍இகோ ஃபார்மசூடிகல் கோ. நிறுவனத்தின் பங்குகள் 6.5% அளவிற்கு உயர்ந்துள்ளன.

கொரோனா சிகிச்சையில், இந்த டெக்ஸாமெத்தாசோன் மருந்து எந்தளவிற்கு பயன்படுகிறது என்பது பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்தது.