ஸ்வீடன்:
2016ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் யோஷினேரி ஓஷிமிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
oximi
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தற்போது தொடங்கி உள்ளது. முதலில் மருத்துவத்திற்கான  நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னைத்தானே சரிசெய்து மறுசுழற்சி செய்யும் உயிரியல் செல்களின் செயல்முறைகள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அவருக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஓசுமி, ஜப்பானில் 1945-இல் பிறந்தவர். 1974-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். டோக்கியோ தொழில்நுட்ப கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் உடல் செல்கள் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பொருள்.
இது உடலின் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கை ஆகும். பார்க்கின்சன், டைப் 2 சர்க்கரை வியாதி மற்றும் பல பரம்பரை வியாதிகளை தடுக்கும் சக்தியுள்ளதாகும். எனவேதான் ஒசுமியின் இக்கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும்,  நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது. மிக உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு 7-ம்தேதி அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. மலேரியா மற்றும் வெப்பமண்டல நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.