டோக்கியோ:

தென் கொரிய இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்தி போர் குற்றம் புரிந்ததற்காக, ஜப்பான் பேரரசர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் அரசு நிராகரித்துவிட்டது.

ஜப்பான் பேரரசர் அகித்தோ.

ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ளன. இருந்தாலும், கடந்த கால வரலாற்று நிகழ்வுளால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது, 1910-45-ம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தை ஜப்பான் ஆக்கிரமித்தது.

அப்போது ஜப்பான் ராணுவத்தினர் கொரியாவின் இளம்பெண்கள், சிறுமிகளை வலுக்கட்டாயப் படுத்தி பாலியல் உறவில் ஈடுபடுத்தினர்.

இது குறித்து கொரிய தேசிய நாடாளுமன்ற சபாநாயகர் மூன் ஹீ&சாங் அளித்த பேட்டியில்,  “அப்போது முக்கிய போர் குற்றவாளி பேரரசர் ஹிரோஹிட்டோ தான். அவரது மகன் பேரரசர் அகித்தோவுக்கு ஏப்ரல் மாத இறுதியில் ஓய்வு பெறுவதற்குள், கொரிய பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு ஜப்பான் தலைமை கேபினட் செயலாளர் யோஷிஹிடே சுகா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்கொரிய சபாநாயகர் மூன் கருத்துகள் சரியானதல்ல. இத்தகைய கருத்தை தெரிவித்த மூன் தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.

அவரது கருத்து எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.

இதற்கிடையே, தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரிய சிறுமிகளையும் பெண்களையும் வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்திய சம்பவத்தினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் மறையவில்லை. இதை ஜப்பான் உணர வேண்டும் என்பதற்காகவே சபாநாயகர் மூன் அத்தகைய கருத்தை தெரிவித்தார்” என்று விளக்கம் அளித்தது.

இரண்டாம் உலகப்போரில் கொரிய பெண்களை ஜப்பான் வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்திய பிரச்சினை தொடர்பாக, 2015-ம் ஆண்டு ஜப்பானுடன் தென்கொரியா ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், அந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு 1 பில்லியன் யென் நிதி உதவி அளிப்பதாகவும் ஜப்பான் கூறியிருந்தது.

ஆனால் சில பெண்கள் ஜப்பானின் நிதி உதவியை வாங்க மறுத்துவிட்டனர். மனதார ஜப்பான் மன்னிப்பு கேட்கவில்லை. அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர் என தென்கொரிய பெண்கள் கூறினர்.

எனினும், இரண்டாம் உலகப் போரின்போது நடந்த வரலாற்றுப் பிழையை சரி செய்ய நாங்கள் முயற்சிப்பதோடு, இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என ஜப்பான் அமைச்சக செய்தி தொடர்பாளர் ரோ க்யூ-டியோக் தெரிவித்தார்.

போரின் போது வலுக்கட்டாயப் படுத்தி பாலியல் உறவு கொண்டதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீட்டை ஜப்பான் வழங்கக் கோரும் வழக்கில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு வெளியானதிலிருந்தே இரு நாடுகளுக்கிடையே உரசல் போக்கு இருந்து வருகிறது.

இந்நிலையில், தென்கொரியாவின் போர் கப்பல் தளம் மீது கடந்த மாதம் ஜப்பானின் போர் விமானம் பறந்ததால், இரு நாடுகளுக்கிடையே மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.