டோக்கியோ:

கொரோனா வைரஸ் காரணமாக  நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜப்பான் கப்பலில் உள்ள பணிகளிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.  சுமார் 3000க்கும் மேற்பட்டப பயணிகள் உள்ள நிலையில், அதில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த வாரம்  ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த டயமண்ட் பிரின்சஸ்  என்ற  சொகுசு கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படவே, அந்த கப்பல் டோக்கியோ அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த கப்பலுக்கு மருத்துவக் குழுவினர் சென்று வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார்  3700 பேர் உள்ள அந்த கப்பலில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தொற்று பல மடங்கு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், அங்குள்ள பயணிகள் 61 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள்  தனி அறையில் வைக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 3700 பேரில் தற்போது வரை 273 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்து முடிக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 61 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கப்பட்டு உள்ளது.

இந்த கப்பலைதங்கள் எல்லைக்குள் விட முடியாது என்று ஜப்பான் அறிவித்துள்ள நிலையில்,  கப்பலில் உள்ள பயணிகளுக்கு  சிகிச்சை அளிக்க அங்கு போதிய மருந்து வசதிகளும்  இல்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், நோய் தொற்றை தடுக்க ஜப்பான் அரசு அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஜப்பான் மருத்துவர்கள் கரையில் இருந்து சென்று அங்கு சிகிச்சை அளித்து திரும்பி வருகிறார்கள்

தற்போது அந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. இந்த கப்பலை வரவேற்க எந்தவொரு நாடும் தயாராக இல்லாத நிலையில், கப்பலில் உள்ள பயணிகளின் நிலைமை கேள்விக்குறியாகி வருகிறது…