புகைபிடிக்காதவர்களுக்கு எக்ஸ்ட்ரா லீவ் : ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ

புகைப் பழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு வருடத்துக்கு ஆறு நாட்கள் அதிக விடுமுறை வழங்குவதாக ஒரு ஜப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது.

டோக்கியோவில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் அங்கு ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் 29ஆவது தளத்தில் உள்ளது.  இங்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ள் ஊழியர்கள் அதிகம் உள்ளனர்.   புகை பிடிக்க இந்த ஊழியர்கள் தரைத் தளத்துக்கு சென்று வர வேண்டும்.  அதற்கு சுமார் 10 நிமிடங்கள் வரை நேரமாகிறது.   இப்படி ஒவ்வொரு ஊழியரும் பலமுறை சென்று வந்தால் வேலை நேரம் வெகுவாக குறைகிறது.  ஆனால் புகைப் பழக்கம் அற்ற மற்ற ஊழியர்கள் முழு நேரமும் பணி புரிந்து வருகின்றனர்.

இதை புகை பிடிக்காத ஒரு ஊழியர் நிறுவனத்தலைமைக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.  அதிக நேரம் பணி புரிந்தும் தங்களுக்கு சலுகைகள் வழங்காததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதையொட்டி நிர்வாகம் நீண்ட ஆலோசனைக்குப் பின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அலுவலக நேரத்தில் புகைபிடிக்க செல்லாத ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பு புகை பிடிக்காத ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.  அது மட்டுமின்றி கூடுதலாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் புகை பிடிக்கும் ஊழியர்களும் புகைப் பழக்கத்தை நிறுத்தலாமா என யோசிப்பதாக கூறி உள்ளனர்.