டோக்கியோ:

83 வயதான ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பான் மன்னராக அகிஹிட்டோ (வயது 83) பதவி வகிக்கிறார்.  இவர் அந்த நாட்டின் 125-வது மன்னர் ஆவார்.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை ஆற்றினார். அப்போது தனது வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலக விரும்புவதாக அறிவித்தார். தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியது கிடையாது.  கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.

மன்னர் பதவி விலகுகிற நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்ரன. தற்போது அந்நாட்டு மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆகும்.