ஜப்பானின் அடுத்த பிரதமராகிறார் சாதாரண விவசாயி மகன்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் அடுத்தப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் யோஷிஹைட் சுஹா.

கடந்த 1948ம் ஆண்டு, ஜப்பானின் கிராமப்புறம் ஒன்றில், ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பயிரிடும் ஒரு விவசாயி – பள்ளி ஆசிரியை தம்பதிக்கு மகனாகப் பிறந்த சுஹா, தன் இளமை காலங்களில் தந்தையின் விவசாய வேலைகளில் உதவியாக இருந்தவர்.

கடந்த 1969ம் ஆண்டு ஹோசேய் பல்கலையில் சேர்ந்தார். எந்தவித குறிப்பிடத்தக்க செல்வாக்கும் இல்லாத பின்னணியிலிருந்து வந்த இவர், ஜப்பான் நாட்டின் முதன்மை கேபினட் செயலாளர் என்ற நிலைக்கு உயர்ந்ததோடு, ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெற்ற ஷின்சோ அபேவின் வலதுகரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு தன் நிலையை வலுப்படுத்திக் கொண்டார்.

அப்போதே, அடுத்தப் பிரதமர் இவர்தான் என்ற பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், தனது உடல்நிலை காரணமாக, பதவி விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்ததை அடுத்து, பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சுஹா.

இவர், பிரதமராக பொறுப்பேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, செப்டம்பர் 16ம் தேதி வெளியாகும். பிரதமராக பொறுப்பேற்கும் இவர், தற்போதைய ஆட்சியின் ஆயுள் காலமான 2021 செப்டம்பர் வரை பதவியிலிருப்பார்.

தற்போது பதவி விலகும் ஷின்சோ அபே, பெரிய அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.