ஓட்டு போட மாட்டோம்: ராஜஸ்தான் பாஜ மாநில அரசுக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்குள்ள கிராமம் ஒன்றில், கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்காத பாரதிய ஜனதா மாநில அரசுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓட்டு போடுவதை புறக்கணிப்பதாக கிராம மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக வசுந்த ராஜே சிந்தியா இருந்து வருகிறார். அங்கு சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைவதை யொட்டி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலை புறக்கணிக்கும் ஜசானா கிராமம்

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நோஹார் மாவட்டத்தில் உள்ள ஜசானா என்ற கிராம மக்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.

மாநில அரசு மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள், பொதுமக்கள், தங்களது கிராமத்த சேர்ந்த பஞ்சாயத்து ஊழியர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில பாஜக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.

தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அந்த கிராமத்தில் 7500 வாக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.  கிராம மக்களின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் அந்த கிராம மக்களிடம் பேசி வருகின்றனர்.