மருத்துவமனையில் குழந்தை; மைதானத்தில் சதம்: இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயின் நெகிழ்ச்சி ஆட்டம்

லண்டன்:

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்கிற நம்ம ஊரு பழமொழியை மெய்ப்பித்திருக்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்.


நாட்டிங்கமில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-0 என்ற விகிதத்தில் வென்று இங்கிலாந்து முன்னிலை வகித்தது.

இந்த வெற்றிக்கு ஜேசன் ராய் அதிரடியாக ஆடி எடுத்த 114 ரன்களே காரணம்.

ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஜேசன் ராயின் முந்தைய நாள் இரவு மோசமானதாக இருந்தது.
பிறந்து 7 வாரங்களே ஆன அவரது கைக்குழந்தை எவர்லிக்கு உடல்நிலை சரியில்லை.

மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, குழந்தையுடனே இரவை கழித்தார். காலை 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி அவர், 2 மணி நேரம் மட்டுமே உறங்கினார்.
போதிய பயிற்சி  எடுக்கவில்லை. அயர்வுடன் இருந்த அவர் நேரே ஆடுகளத்துக்கு வந்தார்.

மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது பற்றியே எண்ண ஓட்டம் இருந்தாலும், தன் அணியின் வெற்றி அதைவிட பெரிது என்று அவர் கண் முன் தெரிந்தது. விளாசத் தொடங்கினார் ஜேசன் ராய்.

114 ரன்களை குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். வெற்றிக் கனியைப் பறித்துவிட்டு அதே மகிழ்ச்சியுடன் தன் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு ஓடினார்.

இது குறித்து ஜேசன் ராய் கூறும்போது, இந்த சதம் எனக்கும் என் குடும்பத்துக்கும் சிறப்பானதாகும். இது மிகவும் உணர்ச்சிகரமான சதமாகும் என்றார்.