முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்தின் மகன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்

ஜெய்ப்பூர்:

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜஸ்வந்த்தின் மகன்  மான்வேந்திர சிங் பாரதியஜனதா கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில்  தன்னை காங்கிரஸ் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

ராகுல்காந்தியுடன் மான்வேந்திர சிங்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  மான்வேந்திர சிங் தற்போது  ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.   அவருக்கும் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவுக்கும் இடையே நீண்டகாலமாக  கருத்து வேறுபாடு நிலவி வந்தது.   இந்த நிலையில் மனவேந்திரசிங் எம்.எல்.ஏ. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில்  பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அப்போது,  நான் பா.ஜனதாவில் சேர்ந்ததே மிகப்பெரிய தவறு. சுயமரியாதைக்காக அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளேன். எனது ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், விரைவில் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ள நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, காங்கிரஸ் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். இது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மான்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகியது ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.