பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் மகன் பங்கேற்பு

மும்பை

பிசிசிஐ பிரதிநிதியாக ஐசிசி கூட்டங்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா கலந்துக் கொள்ள உள்ளார்.

பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.   சென்ற வாரம் அவருக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டது.  இதையொட்டி அவர் கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு அங்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனவே தற்போது அவர் ஓய்வில் உள்ளார்.

ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ பிரதிநிதியாக சவுரவ் கங்குலி கலந்து கொள்வது வழக்கமாகும்.  தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.  எனவே அவருக்குப் பதில் வேறொருவரை பிசிசிஐ பிரதிநிதியாக நியமிக்க வேண்டி உள்ளது.

பிசிசிஐ செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார்.  இனி ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.   அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டியின் போது மத்திய அரசிடம் வரி விலக்கு கோரி ஜெய் ஷா பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.