2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி; உறுதிமொழி ஏற்பு

சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 2வது நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் பிரமாண்ட மவுன ஊர்வலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஜெ. நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவர் மறைந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று  2வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் அமைதி ஊர்வலம் நடைபெறும் என ஏற்கனவே அதிமுக அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சென்னையில் குவிந்தனர்.

அதைத்தொடர்ந்து அமைதிப்பேரணி இன்று காலை 10.30 மணி அளவில்  அண்ணா சாலை – வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம்  புறப்பட்டது. ஊர்வலத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு நடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.  அவர்களுடன் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும்  ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவு பெற்றது. அங்கு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதா சமாதியில்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த  மேடையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அதனை மற்றவர்கள் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றனர்.

ஓபிஎஸ் வாசித்த   உறுதிமொழியில், “ஜெயலலிதா கற்றுத்தந்த பாடங்களை மனதில் நிலை நிறுத்தி தமிழக மக்களுக்கு எல்லா நேரங்களிலும் பாதுகாவலராக செயல்படும் வண்ணம் பொது வாழ்வு கடமைகளை நிறைவேற்றுவோம். மனிதாபிமானத்தையும், சமத்துவத்தையும் இரண்டறக் கலந்து செயல்பட்ட ஜெயலலிதா வகுத்தெடுத்த பாதையை எடுத்துக்காட்டாகக் கொண்டு அரசின் பணிகளுக்கு உறுதுணையாய் நிற்க அயராது உழைப்போம். வரும் நாடாளுமன்ற, இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற உழைப்போம்” என உறுதியேற்றனர்.

ஊர்வலத்தையொட்டி காலை முதலே அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதுபோல கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சென்னயில் சாலையோரம் ஆங்காங்கே ஜெயலலிதா படம் வைக்கப்பட்டு அதிமுகவினர் கூடி உள்ளதால் பல இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்தனர்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கார்ட்டூன் கேலரி