சென்னை:

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில், அவர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கிக்காக, அவரது  போயஸ் தோட்ட இல்லம் உள்பட 4 சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களுக்கு அவரதுஅண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா ஆகியோர் வாரிசு உரிமை கேட்டு வருகிறார்கள்.

இதை எதிர்த்த்து,  அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி மற்றும் ஜானகிராமன்சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு கிடையாது, தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, , தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை தனது கட்சிக்காரருக்கே இருப்பதாகவும், அதிமுக உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, வருமான வரித்துறை சார்பில் வருமானவரித்துறை துணை ஆணையர் ஷோபா உயர்நீதிமன்றத்தில் பதில் அறிக்கைத் தாக்கல் செய்தார்.

அதில்,  2016-2017ஆம் ஆண்டுக்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துகள் உள்ளன.  2016-2017ஆம் ஆண்டுக்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது.

1990-91 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி இருந்தது

2005-06 நிதியாண்டு முதல் 2011-12 வரை ஜெயலலிதா ரூ.6.62 கோடி வருமானவரி பாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரி பாக்கிக்காக  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், அவரது ஐதராபாத் வீடு உள்பட  4 சொத்துகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து  வழக்கின் விசாரணையை  வருகிற ஜூன் மாதம் 6ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.