ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் முன்னாள் எம்எல்ஏ பதர்சயீத், ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ஆஜர்

சென்னை:

ஜெயலலிதா மரணம்  குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்,முன்னாள் எம்எல்ஏ பதர்சயீத் மற்றும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் இன்று ஆஜர் ஆனார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் இதுவரை பல மருத்துவர்கள், காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் தலைமை செயலாளர்கள், ஜெ, சசிகலா குடும்ப உறுப்பினர்கள், வேலையாட்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தில்  இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர்சயீத், மற்றும்  போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் விசாரணை ஆணையத்தின் சம்மனை ஏற்று இன்று விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகினர்.

முன்னாள் எம்எல்ஏவான  பதர்சயீத் மறைந்த ஜெயலலிதாவின்  பள்ளித் தோழி ஆவார்.  அதன் காரணமாக அவரிடம் ஜெயலலிதா உடல் நலம் குறித்த தகவல்கள் பெற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுபோல ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டில் பொன் மாணிக்கவேல் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக இருந்தார். அவரிடமும் ஜெயலலிதா உடல் நலம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.