ஜெ.மரணம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை கமிஷன்,  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விசாரணைக்கு  நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையம், ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உதவியாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள் உள்பட, ஜெ.யின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்பட  பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் முன்னாள் தலைமை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட அவருக்கு பிரத்யேகமாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சிவகுமார் உள்பட பலரிடும் விசாரணை நடத்தியது. மேலும்,  தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கிளை மேலாளர் லீலா செல்வக்குமாரி, சசிகலா வின் உதவியாளர் கார்த்திகேயன் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்றது.

பின்னர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தற்போது  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதைத்தொடர்ந்து ஜூன் 25 மருத்துவர் சிவக்குமார் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும்,  26-ம் தேதி மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி உள்ளது.