தஞ்சாவூர்,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதில், “மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14–ம் தேதி திருவள்ளூரில் தொடங்கி 18–ம் தேதி கோவையில்  நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில்  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக கூறியுள்ளார்.

வருகிற 19–ம் தேதி இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரசு கட்சியினர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்  எம்எல்ஏக்களாக செயல்பட முடியுமா இல்லை என்பது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல தற்போது ஒரு தரப்பினரை குறிவைத்து சோதனை நடைபெறுகிறது.

இதே சோதனையை  ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது நடத்திருந்தால், இப்போது கிடைத்ததைவிட அதிகமாக கிடைத்து இருக்கும் என்றார்.

மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் தவறு இல்லை. நல்லது தான். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி நேரில் வந்து பார்த்து, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால்,  ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிரதமர் மோடி வந்து பார்க்காதது ஏன்? என்பதில் சந்தேகம் இருக்கிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடக்கும் நீதி விசாரணையில் பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது இலக்கு. அந்த இலக்கை நோக்கி காங்கிரஸ் தொடர்ந்து பயணம் செய்யும் என்றார்.

நடிகர் கமலின் அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,   யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமை உள்ளது” என்று  கூறினார்.